EnTamil.News
F Y T

விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவிகள் தொடர்பில் வெளிவந்திருக்கும் தகவல்

நிரோ - 1 மாதத்திற்க்கு முன்பு (2024-11-02)
விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவிகள் தொடர்பில் வெளிவந்திருக்கும் தகவல்

அம்பகஹஓய பிரதேசத்தில் பதுளையில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது. சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியிருந்தது.

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

இரு மாணவிகளுக்கும் விபத்தினால் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் திடீர் மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை நீதவான் நுஜித் டி சில்வா நேற்று (1) இரவு பதுளை போதனா வைத்தியசாலைக்கு சென்று சடலங்கள் தொடர்பான நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனையை பதுளை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டபிள்யூ.எம்.கே.பி. விஜேதுங்க மேற்கொண்டுள்ளார்.



இதற்கமைய, இரு மாணவிகளின் மரணம் வாகன விபத்தில் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ஏற்பட்ட திடீர் மரணம் என வைத்திய அறிக்கைகள் முடிவு செய்துள்ளன.

நேற்று (01) காலை (01) பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நீர்வீழ்ச்சியை கடந்து அம்பகஹஓய பிரதேசத்தில் பதுளையில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியிருந்தது.

இதில் பேருந்தில் பயணித்த மூன்று விரிவுரையாளர்கள் உட்பட 35 பேர் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பல்கலைக்கழக மாணவிகள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தனர்.

இந்த விபத்தில் நிவிதிகல, தோலம்புகமுவ பஹல்கந்தவில் வசித்து வந்த எம்.ஜி.ஐ. உமயங்கனி (24) மற்றும் குருநாகல் பகுதியை சேர்ந்த எம்.எம்.பி.டி. ஹெட்டிமுல்ல ஆகிய இரு மாணவிகள் உயிரிழந்திருந்தனர்.

உயிரிழந்த இரு மாணவிகளின் இறுதிக் கிரியைகளை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பூரண அனுசரணையில் மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.



இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியான உமயங்கனியின் தாயார் மல்லிகா நிமல் சாந்தி மகளின் மரணம் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளார்.மேலும் கூறியதாவது:

“நேற்று எனது கணவரின் பிறந்தநாள். மகள் காலையில் தந்தைக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர் அவரது நண்பன் ஊடாக தந்தைக்கு கேக் அனுப்பியிருந்தார். பிறகு எனக்கு அழைப்பினை ஏற்படுத்தி பேசிக்கொண்டு சென்ற போதே மகள் விபத்தில் சிக்கி இறந்து போனதை அறிந்தேன்.

“இறந்தவர் எனது மூத்த மகள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மாணவி. எனக்கு மேலும் இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் படித்து வருகின்றனர்.


நான் சில காலம் பொலிஸ் சேவையில் இருந்தேன், பின்னர் பிள்ளைகளின் படிப்பின் காரணமாக விலகிவிட்டேன். கணவர் ஆசிரியராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திலிருந்து மகள் தொலைபேசியில் அழைத்து எதிர்வரும் 31ஆம் திகதி பதுளைக்கு பயிற்சித் திட்டமொன்றுக்கு செல்லவுள்ளோம் என்றார்.

இதன்பின்னர் அங்கு சென்று அனைவரும் நேற்று இரவு (31) மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம் என தெரிவித்தார். என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை... கனவு போல இருக்கிறது. காலையில் பேசிய மகள் சில மணி நேரம் கழித்து விபத்தில் இறந்தது தெரியவந்தது என்றும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.



இந்த விபத்தில் காயமடைந்த விஞ்ஞான பீட விரிவுரையாளரை கொத்தலாவல விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு நேற்று மாலை (1) மேற்கொள்ளப்பட்ட முயற்சி அப்பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தோல்வியடைந்துள்ளது.

காயமடைந்த நபர் அம்புலன்ஸ் மூலம் பதுளை கால்பந்து மைதானத்திற்கு கொண்டு வரப்பட்ட போதிலும், மோசமான வானிலை காரணமாக விமானம் நிறுத்தப்பட்டதால், அவரை மீண்டும் பதுளை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.


இதேவேளை, பாதுகாப்புச் செயலாளரின் பணிப்புரையின் பிரகாரம் நோயாளிகளை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்காக இலங்கை விமானப்படையின் பெல் 412 ரக உலங்குவானூர்தி ஒன்று தியத்தலாவ விமானப்படை தளத்தில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர ஆகியோரின் பணிப்புரையின் பேரில் பதுளை பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பரிசோதகர் சானக சிரஞ்சீவ விஜேரத்ன, பொலிஸ் பரிசோதகர் ஜயதுங்க, பிரதி பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.எஸ். ரத்நாயக்க, உப பொலிஸ் பரிசோதகர் ஜினதாச, 54124 பீரிஸ் ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.