பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷகிப் அல் ஹசனின் (Shakib Al Hasan) அனைத்து வங்கிக் கணக்குகளையும் பங்களாதேஷ் நிதிப் புலனாய்வுப் பிரிவு (BFIU) கைப்பற்றியுள்ளது.
இந்த தகவலை பங்களாதேஷ் வங்கியின் செய்தித் தொடர்பாளர் ஹுஸ்னே அரா ஷிகா ( Husne Ara Shikha) நேற்று (06) ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, அக்டோபர் 2ஆம் திகதி ஷகிப் அல் ஹசன், அவரது மனைவி உம்மே அகமது ஷிஷிர் மற்றும் அவரது வணிக நிறுவனங்களின் அனைத்து வங்கிக் கணக்கு விவரங்களையும் பங்குச் சந்தை கையாளுதல் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக பங்களாதேஷ் நிதிப் புலனாய்வுப் பிரிவு கோரியது.
விசாரணையைத் தொடர்ந்தே அரசு அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஷகிப் தற்போது தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் இருப்பதோடு, அவர் மேற்கிந்திய தீவுகள் தொடரை இழப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பங்களாதேஷ் சீருடையில் களம் திரும்புவாரா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
சகலதுறை வீரரான இவர் செப்டெம்பர் பிற்பகுதியில் டெஸ்ட் மற்றும் ரி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஷகிப் 12வது பொதுத் தேர்தலில் அவாமி லீக்கின் வேட்பாளராக தனது சொந்த ஊரான மகுராவிலிருந்து போட்டியிட்டு நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தையும் பெற்றார்.
எனினும், ஆகஸ்ட் 5 அன்று, ஷேக் ஹசீனாவின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தார்.இதன் விளைவாக ஷாகிப் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.
மேலும், ஆகஸ்ட் மாதம் ஒரு கொலை வழக்கில் ஷகிப் அல் ஹசன் பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.