குருநாகல் (Kurunegala) போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சாபி சிஹாப்தீன் (Shafi Sihabdeen), அரசியல் பிரசாரத்திற்காக தமக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக எச்சரித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் நேற்று (06) விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் மற்றும் வழக்கு விசாரணை காரணமாக தனது குடும்பம் கடந்த 05 வருடங்களுக்கும் மேலாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு, அனைவருக்கும் நீதியை வழங்கியுள்ளது. தமக்கு எதிரான குற்றச்சாட்டின் மூலம் முழு சமூகத்தையும் ஏமாற்றி, முஸ்லிம் சமூகமும் பாரபட்சமாக நடத்தப்பட்டுள்ளது
அதே வேளையில், ஒரு சில தனிநபர்கள் ஒரு அரசாங்கத்தை கவிழ்க்க, தங்கள் தனிப்பட்ட மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக எப்படி ஒரு கைக்கூலியாகப் பயன்படுத்தினார்கள் என்பதை இந்த விசாரணை காட்டுகிறது என்றும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு, குருநாகல் போதனா வைத்தியசாலையில் சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வைத்தியர் சிஹாப்தீன் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.
பெண்களின் அனுமதியின்றி கருத்தடை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அத்துடன் சிஹாப்தீன் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவித்ததாகவும், பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணி வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
முன்னதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து, குருநாகல் பிரதான நீதவான் அவரை பிணையில் செல்ல அனுமதித்திருந்தார்.