வவுனியாவில்(Vavuniya) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, சேமமடு - இளமருதங்குளம் பகுதியில் கடந்த 1ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் நாவற்குளம் பகுதியை சேர்ந்த செல்வநிரோயன் (வயது 46) என்ற குடும்பஸ்தர் மரணமடைந்திருந்தார்.
மேலும், வாள்வெட்டில் ஈடுபட்டவர்கள் பயணித்த வாகனத்திக் சாரதியை பொலிஸார் அன்றைய தினமே கைது செய்திருந்தனர்.
இது தொடர்பில் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸாரும், ஓமந்தை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வவுனியா, உக்குளாங்குளம், கூமாங்குளம், வேலங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.