ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara) இன்று மாலை 5:30 மணியளவில் புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வழியாக இந்தியா சென்றடைந்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எஸ். முருகன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கூடுதல் செயலாளர் புனித் அகர்வால், நெறிமுறைத் தலைவர் அன்மான் கவுர் மற்றும் பிற இராஜதந்திர அதிகாரிகள் ஜனாதிபதியை வரவேற்றனர்.
இந்தநிலையில், இலங்கை ஜனாதிபதியின் வருகைக்கு இந்திய ஊடகங்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்துடன் செய்திகளை வெளியிட்டுள்ளன.
அத்துடன், ஜனாதிபதி திசாநாயக்க மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருவரின் படங்களையும் கொண்ட விளம்பரப் பலகைகள் புதுடில்லியில் உள்ள முக்கிய சுற்றுவட்டாரங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இன்றிரவு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளார்.
இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் தொழிலாளர் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ ஆகியோர் இணைந்துள்ளனர்.