நுவரெலியா நகரில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரால் நடத்தி செல்லப்படும் உணவகம் ஒன்றுக்கு சிவில் உடையில் சென்று குழப்பத்தில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த (03) திகதி காலை இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் கண்டி கிழக்கு பிராந்தியத்திற்கு பொருப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரின் காரியாலயத்தில் நுவரெலியாவில் பணியாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
நுவரெலியா மாநகரில் உள்ள முஸ்லிம் பெரியபல்லிக்கு அருகில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரால் அரபிக் உணவு வகைகள் உள்ளடங்கிய உணவகம் நடத்தி செல்லப்படுகிறது.
இந்த உணவகத்திற்கு சம்பவத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் சென்று உணவு பெற்றுக்கொள்ள கடந்த (03) ஆம் திகதி சென்றுள்ளார்.
இதன்போது உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த இடியப்பம்,பராட்டா மற்றும் கறிகள் போன்ற உணவுகள் குளிராகவும் உண்ணமுடியாத தன்மையிலும் காணப்பட்டதாகவும் மனிதன் உண்ண முடியாத நிலையில் உணவுகளை விற்பனை செய்வதாகவும் உணவுகளின் விலை அதிகம் எனவும் வர்த்தகருடன் பொலிஸ் பரிசோதகர் முறன் பட்டுள்ளார்.
அத்துடன் இவ் பொலிஸ் பரிசோதகர் வர்த்தகரையும் உணவக பணியாளர்களையும் தாக்கியும் உள்ளதாகவும் அதேசமயம் குளிரான உணவுகளை வர்த்தகர் பலாத்காரமாக உண்ணவும் செய்துள்ளார்.
அத்துடன் இந்த உணவகத்தின் உணவுகள் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும்,பொது சுகாதார பரிசோதக அதிகாரிகளை வரவழைத்து நடவடிக்கை எடுப்பதாகவும் மிரட்டி எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இந்த பொலிஸ் பரிசோதகர் தான் நடந்து கொண்ட விதங்கள் அங்குள்ள சீசீ டீவி கமராவில் பதியப்பட்டுள்ளது.
இதனை ஆதாரமாக கொண்டு உணவக வர்த்தகர் தனக்கு நேர்ந்ததை நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து இடம்பெற்ற விசாரணையை அடுத்து பொலிஸ் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்