திட்டமிடப்பட்ட தனிநபர் அராஜகத்திற்கு எதிராக போரிடுவதன் அடையாளமாக தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் அரசு கட்சி என்ற பெயரில் சுயேட்சையாக களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியை உடைப்பதற்காக திட்டமிடப்பட்டு உள்ளே அனுப்பப்பட்ட நபர் வெற்றிகரமாக கூட்டமைப்பை உடைத்து, பின்பு தமிழரசுக் கட்சியையும் கைப்பற்றி விண்ணப்பம் கூட அனுப்பாதவர்களை வேட்பாளராக நியமித்துள்ளதாக அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக, அக்கட்சியின் ஆயுட்கால உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறி புதிய கட்சியை அமைத்து தேர்தலை எதிர்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 7 உறுப்பினர்களை கொண்ட குழு ஜனநாயக தமிழ் அரசு கட்சி என்ற பெயரில் சுயேட்சையாக களமிறங்கவுள்ளது.
அந்தவகையில், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், பொ.ஐங்கரநேசன், தமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணி உறுப்பினர்களான விமலேஸ்வரி மற்றும் நாகரஞ்சினி, கரவெட்டி பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் த.ஐங்கரன், புதிய சுதந்திரன் ஆசிரியர் அகிலன் முத்துக்குமாரசுவாமி, ஊர்காவற்துறை பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் கருணாகரன் நாவலன் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளனர்.
அதேவேளை, தமிழரசுக் கட்சியை பேரினவாத ஊடுறுவலில் இருந்து காப்பாற்றி மீட்டெடுக்க அனைத்து தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களும் தங்களோடு ஒன்றிணைய வேண்டும் என மேற்படி தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.