பிரதமர் ஹரிணி அமரசூரியவின் மற்றும் அமைச்சர் விஜித ஹேரத்தின் உருவம் பொறித்த முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவு செய்திகள் தொடர்பில் தபால் திணைக்களம் விளக்கம் அளித்துள்ளது.
”பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத்தின் உருவம் பொறித்த முத்திரைகள் வெறும் நினைவுப் பரிசுகளாகவே வழங்கப்பட்டன.
உலக தபால் தினத்தை முன்னிட்டு, பிரதமர் அல்லது அமைச்சர் விஜித ஹேரத்தின் உருவம் பொறித்த முத்திரைகள் வெளியிடப்படவில்லை.
எந்த ஒரு நபரும் தனக்கு விருப்பமான படத்தைப் பயன்படுத்தி தனிப்பயனாக்க முத்திரைகளை அச்சிடலாம். விசேட சந்தர்ப்பங்களில் நினைவுப் பொருட்களாக தனிப்பயனாக்கப்பட்ட முத்திரைகளை தபால் திணைக்களம் பாரம்பரியமாக வழங்கிவருகிறது.” என்றும் தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
உலக தபால் தினத்தை முன்னிட்டு தபால் தின தேசிய நிகழ்வு நேற்றுமுன்தினம் புதன்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் பிரதான அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.
இதன்போது இவர்களுக்கு நினைவு முத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் ஹரிணி அமரசூரிய மற்றும் விஜித ஹேரத் ஆகியோரின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது. இதுகுறித்தே தபால் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.