இலங்கையில் ஐந்து வயதுக்கு குறைந்த 10,323 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக போஷணை மாதத்தை முன்னிட்டு 2024ஆம் ஆண்டுக்கான குடும்ப சுகாதார சேவைகள் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது.
ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகளவில் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ள நிலையில் அந்த எண்ணிக்கை 994 ஆகும்.
ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளில் 930 பேர் குருநாகல் மாவட்டத்திலும், 629 குழந்தைகள் அநுராதபுரம் மாவட்டத்திலும், 622 குழந்தைகள் கண்டி மாவட்டத்திலும் , 619 குழந்தைகள் காலி மாவட்டத்திலும் பதிவாகியுள்ளனர்.
நாட்டில் ஐந்து வயதுக்கு குறைந்த 25,269 குழந்தைகள் மந்தபோஷணத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அதன்படி, மந்தபோஷணத்தால் பாதிக்கபட்டுள்ள குழந்தைகளில் 2,550 பேர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
குருநாகல் மாவட்டத்தில் 2,245 குழந்தைகள் பதிவாகியுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் 1,578 குழந்தைகள், அநுராதபுர மாவட்டத்தில் 1,340 குழந்தைகள் பதிவாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த 215,386 குழந்தைகள் பதிவாகியுள்ள நிலையில் அவர்களுள் அதிகமான குழந்தைகள் குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 17,701 ஆகும்.
வயதுக்கு ஏற்ப எடை குறைந்த குழந்தைகளிடையே 15,994 குழந்தைகள் கம்பஹா மாவட்டத்திலும் 15,376 குழந்தைகள் கண்டி மாவட்டத்திலும் பதிவாகியுள்ளனர்.
மேலும், ஐந்து வயதுக்குட்பட்ட வயதுக்கு ஏற்ப உயரம் குறைந்த 133,538 குழந்தைகள் பதிவாகியுள்ளதாக குடும்ப சுகாதார சேவைகள் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.
அவர்களுள் அதிகமானோர் நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் எண்ணிக்கை 11,667 ஆகும்.
10,177 குழந்தைகள் குருநாகல் மாவட்டத்திலும் 10,093 குழந்தைகள் கண்டி மாவட்டத்திலும் பதிவாகியுள்ளனர்.
கடந்த காலங்களில் காணப்பட்ட அதிக வரிச் சுமை, பொருட்களின் விலையேற்றம், உணவுப் பொருட்கள் விலையேற்றம் போன்ற அடிப்படை விடங்கள் இத்தகைய விடயங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளதாக பொருளாதார அவதானிகள் தெரிவிக்கின்றனர்.