இலங்கை முழுவதும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால், அசுத்தமான தண்ணீரின் மூலம் பரவும் நோய்கள் குறித்து சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை சுகாதாரத்துறையின் சிரேஸ்ட மருத்துவ ஆலோசகர் ஆனந்த விஜேவிக்ரம, இந்த எச்சரிக்கையை ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்.
நடவடிக்கை
டெங்கு, எலிக்காய்ச்சல் என்ற லெப்டோஸ்பிரோசிஸ், டைபொய்ட் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நீர்வழி நோய்கள் பரவக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
எனவே அசுத்தமான தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் பணிபுரிபவர்கள் காய்ச்சல், தலைவலி மற்றும் தசைவலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று மருத்துவ நிபுணர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
வெள்ளம் ஏற்பட்ட காலத்தில் இந்த நோய்களின் தாக்கம், உடனடியாக இல்லையென்றாலும், வெள்ளம் வடிந்தவுடன் அடுத்த இரண்டு வாரங்களில் அவை வெளிப்பட ஆரம்பிக்கும்.
எனவே, இந்த நோய்களைத் தடுக்க மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் பாதுகாப்பான குடிநீர், முறையான சுகாதாரம் மற்றும் நல்ல சுகாதார நடைமுறைகள், கொதிக்க வைத்த தண்ணீரைக் குடிப்பது ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.