இலங்கையின் பிரபல சுற்றுலாத் தளமாக அறுகம்பையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறி அமெரிக்கா, பிரித்தானியா, நியூசிலாந்து மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தமது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.
அறுகம்பை வளைகுடா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்து இந்த நாடுகளின் தூதரகங்கள் பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பில் கொழும்பில் உள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
அறுகம்பை வளைகுடா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பாரிய ஆபத்து காரணமாக, மறு அறிவித்தல் வரை அறுகம்பைக்கு அமெரிக்க தூதரகம் பயணத்தடை விதித்துள்ளது.
மேலும், மறு அறிவித்தல் வரை அறுகம்பை பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளை கேட்டுக்கொள்வதாவ தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிக மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், மிகவும் அவதானத்துடன் இருக்கவும் ரஷ்யர்களுக்கு கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் விசேட அறிவிப்பு விடுத்துள்ளது.
அறுகம்பை பகுதியில் வெளிநாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கை பொலிஸார் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இலங்கைக்கான பயண ஆலோசனையையும் புதுப்பித்துள்ளது.
அறுகம்பை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள பயண ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பிரித்தானிய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அறுகம்பை பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு பொலிஸார் விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
இதன்படி, அறுகம்பை சுற்றுலாப் பகுதியின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
புலனாய்வு அமைப்புகளும் ஏனைய பாதுகாப்புப் படையினரும் பிராந்தியத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
அறுகம்பை மற்றும் பொத்துவில் கடற்பிரதேசங்களில் அலைச் சறுக்கு (Surfing) விளையாட்டுக்கு பிரபலமான இடங்கள் இருப்பதன் காரணமாக இஸ்ரேலியர்கள் அடிக்கடி அங்கு செல்வதாகவும், அண்மைக்காலமாக அவர்களை இலக்கு வைத்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
கொழும்பில் அல்லது நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இதுவரையில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைக்கவில்லை எனவும், எனவே பொதுமக்கள் அச்சமும் கொள்ள வேண்டாம் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
“அறுகம்பை பகுதியில், இஸ்ரேலியர்களால் நிறுவப்பட்ட பிரபல அலைச் சறுக்கு (Surfing) மையம் இருப்பதாகவும், இதனால் இஸ்ரேலியர்கள் பொத்துவில் மற்றும் அறுகம்பை பகுதியை நோக்கி படையெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.