இலங்கையின் பல சுற்றுலாத் தளங்களில் தற்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளது.
அறுகம்பே மற்றும் வெலிகம் போன்ற இஸ்ரேல் நாட்டவர் அதிகளவில் தங்கியிருக்கும் பிரதேசங்களை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் அபாயம் காணப்படுவதாக அமேரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இவ்வாறான ஒரு சூழல் உருவாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில், இலங்கையில் இருப்பவர்கள் வெகு விரைவில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் அறிவித்தல் விடுத்திருந்தது.
இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் எதிர்வரும் சுற்றுலா திட்டங்களை இரத்து செய்து இலங்கையிலிருந்து வெளியேற முயற்சி செய்து வரும் நிலையில் மேலும் பலர் தங்கியிருக்கும் இடங்களிலேயே தரித்திருக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில், இலங்கையில் சுற்றுலாவில் ஈடுபட வருகைத்தந்திருந்த இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மீள திரும்பியுள்ளனர்.
திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் இலங்கையின் அமெரிக்க தூதுரகம் மற்றும் இஸ்ரேல் அரசாங்கம் மூலமும் இலங்கையில் மேலும் தரித்து நிற்பது அபாயம் என அறிவிக்கப்பட்டதையடுத்து இவ்வாறு திரும்பிச் சென்றுள்ளனர்.
எவ்வாறாயினும், தற்போது நாட்டில் போதியளவு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுற்றுலா தளங்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.