நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ள எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வந்த நிலையில், தேசியப் பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் இன்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு கட்டுப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மக்களால் தெரிவுசெய்யப்பட்டால் மாத்திரமே தான் நாடாளுமன்றம் செல்வேன் என்றும், கட்சியின் மத்தியகுழுவே தேசியப் பட்டியல் ஆசனத்தை தீர்மானிக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஒருவேளை மத்திய குழு தேசியப் பட்டியலுக்காக உங்களைத் தெரிவு செய்தால் என்ன செய்வீர்கள்’ என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் முடிவுக்கு முழுமையாகக் கட்டுப்படுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.