2024 ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது.
இன்று வெளியான பெறுபேறுகளுக்கமைய, கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பெரும்பான்மையான உறுப்பினர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், சுசில் பிரேமஜயந்த, நிமல் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்னாண்டோ, ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய, சன்ன ஜயசுமன, பவித்திரா வன்னிஆராச்சி, சாகல ரட்நாயக்க, தோல்வி அடைந்துள்ளனர்.
ஜனநாயக குரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தோல்வி அடைந்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் திலும் அமுனுகம, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, நிமல் லன்சா, பிரசன்ன ரணவீர, அஜித் ராஜபக்ச, அருந்திக்க பெர்னாண்டோ, ஜானக்க வக்கும்புர, பிரேமலால் ஜயசேகர, புத்திக பத்திரன, சரத் வீரசேகர ஆகியோர் படுதோல்வி அடைந்துள்ளனர்.
குருநாகல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 12 ஆசனங்களை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி குருநாகல் மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ படுதோல்வியடைந்து தனது ஆசனத்தை இழந்துள்ளார்.
அதற்கமைய, குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆசனத்தைப் பெறத் தவறிவிட்டது.
இதேவேளை முன்னாள் தமிழ் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அங்கஜன் ராமநாதன், மனோ கணேசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தோல்வி அடைந்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர்களான காஞ்சனா விஜேசேகர, மகிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார, ரமேஷ் பத்திரன, ஷசீந்திர ராஜபக்ஷ உட்பட பலர் தோல்வி அடைந்துள்னர்.
இதேவேளை கடந்த அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சு பதவிகளை வகித்த வடிவேல் சுரேஷ் மற்றும் அரவிந்தகுமார் பதுளை மாவட்டத்தில் படுதோல்வி அடைந்துள்ளனர்.
அதேவேளை முன்னாள் ராஜாங்க அமைச்சர்களான பிரமித்த பண்டார தென்னக்கோன் மற்றும் ரோஹன திசாநாயக்க மாத்தளை மாவட்டத்தில் படுதோல்வி அடைந்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, டீ.பி.ஹேரத், ஷாந்த பண்டார, அசங்க நவரத்ன ஆகியோரும் தோல்வி அடைந்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, எஸ்.எம். சந்திரசேன அனுராதபுரம் மாவட்டத்தில் படுதோல்வி அடைந்துள்ளனர்.
இந்தத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட பல சிரேஷ்ட அரசியல்வாதிகள் போட்டியிடுவதை தவிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 21ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வர்த்தகமானி மூலம் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பல முகங்களுடன் புதிய நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.