திருகோணமலை உவர்மலை வாழை முனை( Plantan Point) கீழ் சுற்றுவட்ட வீதி 36 வருடங்களுக்குப் பின்னர் மக்களின் பாவனைக்காக இராணுவத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (01) திறந்து வைக்கப்பட்டது.
பிரித்தானியரின் ஆட்சியின் போது,திருகோணமலை உற்துறைமுகத்தின் பாதுகாப்பிற்கென இயற்கையான கேந்திர தானமான இவ் முனைப்பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த உவர்மலையின் பின்பகுதியான இவ் சுற்றுவட்ட வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளமையின் மூலம் உவர்மலை மத்திய வீதியினூடாக செல்கின்ற மக்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் அமைந்துள்ள உவர்மலை கீழ் வீதியினூடாக திரும்பி வரமுடியும்.
இவ்வீதி சுமார் 36 வருடங்களுக்குப் பின்னர் மக்களின் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அதேவேளை இவ்வீதியானது 1988 ஆம் ஆண்டு மூடப்படும் வரை நகர பாடசாலை மாணவர்களுக்கான பேரூந்து சேவை ஒன்று இவ் வீதி ஊடாக நடைபெற்று வந்தது.
அனுர ஆட்சியில் மாற்றம்
இப்பகுதிக்குச் சென்று திருகோணமலையின் மற்றுமொரு இயற்கை அழகை இரசிக்க முடியும். முனைப்பகுதியில் இருந்து மிக அண்மித்த தூரத்தில் அமைந்துள்ள பிறீமா மா ஆலை தொழிற்சாலை,டோக்கியோ சீமேந்து தொழிற்சாலை என்பவற்றை காண முடியும் என்பதுடன் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள் இராணுவ அருங்காட்சியகத்தையும் பார்வையிடலாம்.
அதேவேளை அத்துடன் 22ஆம் படைப்பிரிவு அமைந்துள்ள வீதியூடான சுற்றுவட்ட வீதியை திறப்பதற்கான நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாகவும்,எதிர்வரும் இரண்டு மாதகாலத்திற்குள் அவ்வீதியும் மக்களின் பாவனைக்காக திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுர தலமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நல்லிணக்க செயற்பாடு ஊடாக, யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தின் அதியுயர் கட்டுப்பாட்டிலிருந்த வீதி மூன்று தசாப்தங்களின் பின்னர் யாழ்ப்பாணம் பலாலி வீதி - வசவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக கடந்த மாதம் விடுவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது கிழக்கிலும் அவ்வாறானதொரு வீதி மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.