நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்யப்பட்டால், அது தொடர்பில் நுகர்வோர் ஆணையத்தின் 1977 என்ற எண்ணுக்கு அழைத்து முறைப்பாடு செய்யலாம் என நுகர்வோர் அதிகார சபை( Ministry of Consumer Affairs Authority) தெரிவித்துள்ளது.
அரிசிக்கான அதிகபட்ச விலையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதிகபட்ச விலைக்கு மேல் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடும் வகையில் இன்று (10) முதல் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (09) வெளியிடப்பட்ட அரிசிக்கான அதிகபட்ச விலையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலின் படி, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
புதிய அரிசி விலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மேல் அரிசி விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, வர்த்தக சமூகம், உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் நாங்கள் அறிவித்த விலைக்கு ஏற்ப அரிசியை கொள்வனவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
முறைகேடாக அல்லது அதிகப்படியான விலைக்கு அரிசி விற்பனை நடந்தால், நுகர்வோர் ஆணையத்தின் 1977 என்ற எண்ணுக்கு அழைத்து முறைப்பாடு செய்யலாம்.
மேலும் நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார்.